கோவை: கோவை மாநகரில் பட்டாசு கடை அமைப்பதற்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் பட்டாசு கடை அமைப்பதற்கு விண்ணப்பிக்கும் தேதிகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 08.11.2026 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகர காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட (பி1 முதல் பி5 சி1 முதல் இ1 முதல் இ3 மற்றும் டி1 முதல் 46 வரையிலான காவல் நிலைய எல்லைகள்) பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் 01.09.2026 முதல் 30.09.2026 மாலை 05.00 மணிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப்படிவம் AE-5 இல் (இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து) ரூ.2/மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பப்படிவம் AE-5 இல் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டி, மேலும் 3 புகைப்படம் தனியாக இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தில், மனுதாரார் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல், உரிமக்கட்டணம் ரூ 1200 கருவூலக வங்கியில் செலுத்தியதற்குறிய சலான். இதற்கான சலான் இவ்வலுவலகத்தில் வழங்கப்படும், பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள். வரைபடத்தில் வரைபட குறியீடு எண். (Drawing No. மற்றும் வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்.
சாலையின் பெயர், அருகிலுள்ள கட்டிடங்களின் விபரம். மற்றம் அருகிலுள்ள முக்கிய அடையாள இடம் (Land mark) தெளிவாக வரைபடத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும், அவ்விடம் சொந்தக்கட்டிடமாக இருப்பின் 2025-26 ஆம் ஆண்டுக்குரிய முதலாம் அரை ஆண்டு வரை அதாவது 30.09.2026 வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது.
வாடகைக் கட்டிடமாக இருப்பின் 2025-26ஆம் ஆண்டுக்குரிய முதலாம் அரை ஆண்டு வரை அதாவது 30.09.2026 வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது. சொத்துவரி ரசீதுடன் கட்டிட உரிமையாளரின் சம்மதக்கடிதம் ரூ.20/ மதிப்புள்ள முத்திரைதாளில் 2 சாட்சிக் கையொப்பத்துடன் (சாட்சிகளின் முழுவிலாசாத்துடன் தேவை).
மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், மாநகராட்சி பஞ்சாயத்திற்கு உரிமக் கட்டணம் செலுத்திய ரசீது, விண்ணப்பதாரரின் பெயரில் GST பதிவு சான்றிதழ் மற்றும் PAN நகல், கடை அமையவுள்ள இடத்தின் போட்டோ-3
பட்டாசு இருப்புவைத்து விற்கப்படவுள்ள இடமானது ஒன்பது சதுர மீட்டருக்குக் குறையாமலும், இருபத்தைந்து சதுர மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆவணங்களுடன் 01.09.2026 காலை 10.00 மணி முதல் 30.09.2026 மாலை 05.00 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்படும் மேற்கண்ட தேதிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக் கெடு நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. குறித்தகாலக் கெடுவுக்குள் முழுமையாகப் பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும்
சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, விசாரணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும். வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது. கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம் மற்றும் சினிமா தியேட்டர்களில் தற்காலிக பட்டாசுகடை அமைக்க உரிமம் வழங்கப்படக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.
அதே சமயம் வெடிபொருட்கள் விதிகள் 2008விதி 83 (3) இன் படி, “வளாகம் 9 சதுர மீட்டருக்கும் குறையாத மற்றும் 25 சதுர மீட்டருக்கும் மிகாத சேமிப்புப் பகுதியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





