கோவை: பாலக்காடு சாலை நவக்கரையில் அமைந்துள்ள ஈஷா (EASA) பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகை முடிந்த நிலையில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக தற்போது ஓணம் விழா கொண்டாடப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் 26ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள நிலையில், இங்குள்ள கல்வி நிறுவனங்கள் சார்பில் கடந்த ஒரு வாரமாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனிடையே கேரளத்தை ஒட்டியுள்ள ஈசா கல்லூரியில் இன்று ஓணம் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பொறியியல் கல்லூரி என்பதால் முதலாமாண்டு மாணவர்கள் தற்போது தான் வந்துள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயலர் டி.ஈ. அஜித், தாளாளர் டி.ஈ. ஆதர்ஷ், தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைக்க, ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் களைக்கட்டியது.

மாணவ, மாணவிகள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர்.
அப்போது மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவர் செண்டைமேளம் முழங்க அழைத்து வரப்பட்டார். மாணவிகள், பேராசிரியைகள் கல்லூரி வளாகத்தில் இட்டிருந்த அழகியப் பூக்கோலத்தைப் பார்த்து மகிழ்ந்ததுடன்,மாணவிகளின் திருவாதிரைக்களி நடனத்தைக் கண்டு ரசித்த நிகழ்வு, ஓணம் பண்டிகையின் புராண நிகழ்வை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவருடன் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து அனைவருக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவைமிக்க பாயாசம் வழங்கி, ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
பின்னர், அனைவருக்கும் ஓணம் சத்யா விருந்து பரிமாறப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால் ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகமே விழாக்கோலத்தில் காட்சியளித்தது. மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் காலை முதல் மாலை வரை ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.





