கோவை: கோவை மாவட்டத்தில் பக்தர்கள் அதிகம் வழிபடும் 5 முக்கிய கோயில்களில், நாளை முதல் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
கோயில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கவும், பக்தர்கள் அமைதியான முறையில் வழிபாடு மேற்கொள்ளும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், ஈச்சனாரி விநாயகர் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய 5 கோயில்களிலும் நாளை முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை உடன் எடுத்துச் சென்றால், அவற்றை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தும் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக பக்தர்களிடம் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது போன்ற செயல்கள் கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக, வழிபாட்டின்போது செல்போன் ஒலிப்பது உள்ளிட்டவற்றால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையின் முக்கிய ஆன்மிகத் தலங்களாக விளங்கும் இந்த 5 கோயில்களுக்கும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், செல்போன் பாதுகாப்பு மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, நாளை முதல் இந்த 5 கோயில்களுக்கும் செல்லும் பக்தர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இந்த 5 ரூபாய் கட்டணம் ஜிபே மூலம் பெறப்படாது. பணமாகவே செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்து
கோயிலுக்குள் செல்போனை எடுத்துச் செல்வதைத் தடுப்பது நல்ல முயற்சியாக இருந்தாலும், அதனை பாதுகாக்க 5 ரூபாய் கட்டணம் என்பது தேவையற்ற ஒன்று. கோயிலுக்கு வருமானம் என்ற பெயரில் அங்கு வரும் மக்களை கப்பம் கட்ட வைக்கும் நடைமுறையை அரசு கைவிட வேண்டும்.
Also Read: அவினாசி சாலை மேம்பாலத்தின் சிக்கல்… எப்போது தீர்வு? எதிர்பார்ப்பில் மக்கள்!
ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்பவர்கள், ஒவ்வொரு கோயிலுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி கோயிலுக்குச் செல்வது சில நேரங்களில் பொதுமக்களுக்கு சலிப்பைத் தட்டும். மேலும், ஜிபே இல்லை என்று சொல்வது இன்னும் கோயில் அருகே பிரச்சனைகளை உண்டாக்கும்.
காரில் வரும் மக்கள் தங்கள் செல்போனை பாதுகாப்பாக வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்களிலும் வரும் மக்கள் மட்டும் தான் இதில் பாதிக்கப்படுவார்கள். இப்படி ஒரு வருவாயை அரசு ஈட்டத்தேவையில்லை. என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் வாசகர்களின் கருத்துகள் என்ன என்பதை நமது சமூக வலைதள பக்கத்தில் கமெண்டாக பதிவிடலாம்…
👉 FaceBook-ல் Comment செய்ய இங்கே க்ளிக் செய்யவும்





