கோவை:கோவையில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படுமா? என்று கோவை மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைந்த பிறகும், கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. மது மற்றும் போதைப்பொருள் புழக்கமே இந்த குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது. இந்தக் கொலை சம்பவங்களைப் பார்க்கும் போது, திமுக ஆட்சியில் நடந்ததை விட கூடுதலாக இருக்குமோ? என்ற பேச்சுக்கள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, கொலை குற்றங்களிலும் கோவை 2வது இடத்தை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற சம்பவங்களே கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. அந்த வகையில், இன்றும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,
ஆலந்துறையை அடுத்துள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில் பெண் தொடர்பான தகராறில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றும்…
வெள்ளிமலைப்பட்டினத்தைச் சேர்ந்த திமுக கிளை நிர்வாகியான நாகராஜ்,62, என்பவர் இன்று காலை 6 மணியளவில் டீ வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும், முன்னாள் திமுக கிளை அவைத்தலைவருமான கந்தசாமி என்பவர் நாகராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது காயமடைந்த கந்தசாமியும், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கந்தசாமியின் மனைவி நாகராஜூடன் தகாத உறவில் இருந்ததாக சந்தேகம் அடைந்ததால், இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியதாகக் கூறப்பகிறது. ஆனால், அப்படி தொடர்பு ஏதுமில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், கோவை வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் அதிக கொலைகள் நடந்த மாதமாக இந்த ஆகஸ்ட் மாறியுள்ளது. பீளமேடு, கிணத்துக்கடவு, சிங்காநல்லூர்,கிணத்துக்கடவு என பல்வேறு இடங்களில் இந்த ஒரே மாதத்தில் மட்டும் 9 கோலைகள் அரங்கேறியுள்ளன. இதனால், கோவையில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியும், அச்சமும் எழுந்துள்ளது.
ஆகஸ்ட் 4ம் தேதி பீளமேட்டில் நவீன் என்ற இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 6ம் தேதி அஸ்வின் என்ற இளைஞர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 10ம் தேதி கல்லூரி மாணவர் அமுதன் என்பவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சாந்தி (58) என்ற பெண்மணி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் கோவையில் வெவ்வேறு தனிப்பட்ட காரணங்களினால் மேலும் 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கொலை சம்பவங்களை கீழே விரிவாக காணலாம்.
பீளமேடு நவீன்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நவீன் எம்பிஏ பட்டதாரியாவார். இவர், அவ்வப்போது கோவை வந்து தன்து நண்பர்களைச் சந்தித்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆக.,3ம் தேதி இரவு நவீனின் நண்பர்கள் பைக்கில் வேகமாக சென்ற போது, அவர்களை வழிமறித்த சந்தோஷ், விக்னேஷ் ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதை தங்களின் நண்பன் நவீனிடம் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சந்தோஷை பார்த்த நவீன் மற்றும் அவரது நண்பர்கள், அவரை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர்,சந்தோஷின் நண்பர்கள், நவீனின் அறைக்கு ஆயுதங்களுடன் சென்று கொடூரமாக தாக்கியதுடன், நவீனின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிணத்துக்கடவு அஸ்வின்
கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் நள்ளிரவில் நண்பர்கள் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அஸ்வின் என்ற வாலிபரை அவரது நெருங்கிய நண்பர்களே கத்தியால் குத்தியும் சுத்தியலால் அடித்தும் கொடூரமாகக் கொன்றுள்ளனர். அஸ்வின் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை செல்பி வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவன் அமுதன்
கோவையை மிகவும் உலுக்கிய சம்பவமாக அமைந்தது ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த 19 வயதேயான அமுதனின் கொலை தான். கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கென்னடி – சுமதி ஆகிய தம்பதியின் மகனான அமுதன், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சக கல்லூரி மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக போலீஸில் அளித்த புகாரினால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். தமிழக சட்டசபையில் புயலை கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாப்பநாயக்கன்பாளையம் சாந்தி
பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி (58) என்பவர் மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்துள்ளனர். சாந்தியை மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள்ளேயே புகுந்து அடித்துக் கொன்றுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்தி கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
சிங்கை முதியவர்
சிங்காநல்லூர் தேவேந்திரகுல வீதியைச் சேர்ந்த வேலுசாமி என்ற கூலித் தொழிலாளி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக வசித்து வந்தார். இந்த சூழலில், வேலுச்சாமியின் வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதைக் கவனித்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மர்ம நபர்களால் வேலுச்சாமி கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவர் கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சிவாவை, போலீஸார் கைது செய்தனர்.
அடுத்தடுத்த சம்பவங்கள்
இதேபோல, காரணம்பேட்டையில் தங்கி பச்சை குத்தும் தொழிலை செய்து வந்த திருச்சியைச் சேர்ந்த தேவதாசன் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அசோக் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. ராமாச்சியாம்பாளையம் அருகே டாஸ்மாக் கடை அருகே தேவதாசன் நின்று கொண்டிருந்த போது, ரஞ்சித், அசோக்குடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து தேவதாசனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுல்தான்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (39) என்பவர் பக்கத்து வீட்டுக்காரர் கண்ணன் என்பவர் கட்டையால் தாக்கியுள்ளார். இதில், செந்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். கண்ணன் சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படும் நிலையில், அவர் கூச்சலிட்டு இருந்ததைக் செந்தில் குமார் கண்டித்ததால், அந்த ஆத்திரத்தில் அவர் இச்செயலை செய்துள்ளார்.
கொலை அதிகரிப்பு
கோவையில் கிராமப்புற மற்றும் புறநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2024ம் ஆண்டை விட 2025ல் கொலைச் சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ளன. 2024ல் 38 கொலை வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2025ல் அது 49 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 30% அதிகரித்துள்ளது. தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக 13 வழக்குகளும், மது போதையில் ஏற்பட்ட மோதல்களில் 15 வழக்குகளும், குடும்பத் தகராறு காரணமாக 9 வழக்குகளும், தகாத உறவ மற்றும் வேறு பிரச்சினைகளால் 4 வழக்குகளும், வன்கொடுமை தொடர்பாக 4 வழக்குகளும் பதிவாகியுள்ளன. சாதி, மதம் அல்லது அரசியல் ரீதியான கொலைகள் எதுவும் கோவையில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பதிவான அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது.
கோவை மாநகரப் பகுதியைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரௌடிகள் மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொலை வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மாநகரப் பகுதியில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தலா 28 கொலைகள் பதிவாகின. இது 2023ம் ஆண்டில் 22 ஆகக் குறைந்தது ரவுடிகள் பட்டியல் கண்காணிப்பு மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் குற்றங்களின் வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு கொலை குற்றங்கள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக போலீசார் வெளியிடாத நிலையில், மே மாதம் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 9 கொலை சம்பவங்கள் கோவையை உலுக்கியுள்ளது.
கோவை கொலை நகரமாக மாறுவதைத் தடுத்து, அமைதியான நகராக மாறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதே கோவை மக்களின் பெரிய எதிர்பார்ப்பாகும்.




