கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் மூதாட்டியிடம் முகமூடி அணிந்து பேச்சுக் கொடுத்து 4 பவுன் தங்கச் செயினை பறித்த கல்லூரி மாணவர் மற்றும் அவரது காதலியை போலீசார் கைது செய்தனர். சொகுசு வாழ்க்கை, கடனை அடைத்தல் மற்றும் கார் வாங்குவதற்காக நகை பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை போத்தனூர், வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர் கடந்த 30-ம் தேதி வீட்டின் முன்பு உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள பல் சிகிச்சை கிளினிக் எப்போது திறக்கப்படும் என்றும், மருத்துவரின் வீடு எங்கு உள்ளது என்றும் சரஸ்வதியிடம் கேட்டுள்ளார்.
சரஸ்வதி மருத்துவரின் வீடு இருக்கும் திசையை சுட்டிக்காட்டியபோது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை அந்த வாலிபர் பறித்துள்ளார். இதில் நிலைதடுமாறிய சரஸ்வதி கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் வாலிபரை பிடிக்க முயன்றபோது, அருகில் ஸ்கூட்டரில் தயாராக இருந்த பெண்ணுடன் அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை அமைத்து விசாரணை
தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படியும், போத்தனூர் உதவி கமிஷனர் வசந்தராஜன் வழிகாட்டுதலின்படியும், இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் நகை பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரின் பதிவு எண் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூரைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அவரது காதலி நெல்லையைச் சேர்ந்த சிந்து (21) என்பது தெரியவந்தது. இருவரும் கே.ஜி.சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கல்லூரி விடுதியில் தங்கியிருந்த பரணிதரனையும், வெளியே அறை எடுத்து தங்கியிருந்த சிந்துவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் மூதாட்டி சரஸ்வதியிடம் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சொகுசு வாழ்க்கை, கார் வாங்க நகை பறிப்பு
இதுகுறித்து தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட இருவரும் ஆடம்பரமாக வாழவும், பரணிதரனின் கடனை அடைக்கவும், கார் வாங்கவும் வயதான பெண்களை குறிவைத்து நகை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி வெள்ளலூர் பகுதியில் வீட்டின் அருகே அமர்ந்திருந்த சரஸ்வதியிடம் பரணிதரன் முகமூடி அணிந்து சென்று பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில் முதலில் சிந்துவை கைது செய்தோம். அவர் அளித்த தகவலின் பேரில் கே.ஜி.சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த பரணிதரனை தனிப்படையினர் கைது செய்தனர்.
இருவரும் தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக மாஸ்க் அணிந்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஸ்கூட்டரின் பதிவு எண்ணை மறைப்பதற்காக கருப்பு நிற டேப்பை பயன்படுத்தியுள்ளனர்.
60-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், முகத்தை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற மாஸ்க் மற்றும் ஸ்கூட்டரின் பதிவு எண்ணை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பறிக்கப்பட்ட 4 பவுன் தங்கச் செயினும் மீட்கப்பட்டுள்ளது. இருவருக்கும் வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும். இது குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றம் நடைபெற்றால் குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து கைது செய்வதற்கும் போலீசாருக்கு பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது உதவி கமிஷனர் வசந்த ராஜன், இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் உடனிருந்தனர்.
சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரின் சிறப்பான பணியை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.





