கோவை: இந்த வாரம் வெளியாகப் போகும் ஓடிடி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பற்றி தற்போது காணலாம்.
காலம் மாற மாற சினிமாவின் அத்தியாயமும் மாறிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் தியேட்டர்களில் வரும் படங்களுக்கே வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது அதற்கு இணையாக ஓடிடி படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், தியேட்டர்களுக்கு வராமலே, ஓடிடியிலேயே வெற்றி அடைந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்சார் கட் பிரச்சினை இல்லாததால், கவர்ச்சி மற்றும் ஆபாச வார்த்தைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் தாராளமாக இருக்கின்றன. இது இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வாரம் இயக்குநராக இருந்து ஹீரோவாக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், மாதவன் நடித்த படங்களும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் துவங்க இருக்கின்றன. இன்றைய (செப்டம்பர் 4) தினம் மற்றும் 6ம் தேதி வெளியாகவிருக்கும் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ குறித்த விபரத்தை தற்போது காணலாம்.
கொரியன் கனகராஜு (Korean Kanakaraju)
கொரியன் கனகராஜு என்பது தெலுங்கு நடிகர் வருண் தேஜ் கொனிடேலா நடிப்பில் உருவாகியுள்ள ஒரு நகைச்சுவை மற்றும் ஹாரர் கலந்த திரைப்படமாகும். மெர்லபாக காந்தி இயக்கியள்ள இந்தப் படத்தில் ரிதிகா நாயக், சுனில் வர்மா, தக்ஷா நாகர்கார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

கதைக்களம்
ஒரு எதிர்பாராத சம்பவத்தால் கொரிய நாட்டு நபரின் ஆவியால் ஆட்கொள்ளப்படும் கிராமிய பஜனை குழுவைச் சேர்ந்த கனகராஜு, அந்த ஆவியின் பிடியில் இருந்து விடுபடத் தனது காதலி மற்றும் நண்பருடன் தென் கொரியா செல்லும் சுவாரஸ்யமான மற்றும் குழப்பமான பயணம் தான் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையாகும்.
தி கோர்ட் (The Court)
‘தி கோர்ட்’ என்பது பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு ரொமான்டிக் மற்றும் உணர்வுபூர்வமான நாடகத் திரைப்படமாகும். இந்தப் படத்தில் யோகாலட்சுமி, வி.ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் ஷியாம் கோபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் இன்று வெளியாகிறது.
கதைக்களம்
பேச்சு குறைபாடு உடைய யாழினி என்ற இளம் பெண், தனது சொந்தத் தந்தைக்கே எதிராகச் சட்டப் போராட்டத்தில் ஈடுபடும் சவாலான சூழலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. அவரது தந்தை ராஜ சேகர் ஒரு புகழ்பெற்ற மூத்த சாதனையாளர் ஆவார்.
இந்தச் சட்டப் போராட்டமும் தொழில்முறை மோதல்களும் அவர்களுக்கு இடையேயான குடும்ப உறவுகளில் உள்ள மறைந்திருக்கும் பிளவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இவற்றுக்கு மத்தியில் யாழினி தனது சொந்தக் குரலையும் சுயமரியாதையையும் எப்படி மீட்கிறாள் என்பதை இப்படம் உணர்ச்சிகரமாகப் பேசுகிறது.
டிசி (DC)
டிசி என்பது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு அதிரடி மற்றும் காதல் திரைப்படமாகும். லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநராக பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், முதல்முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநராக ஜெயித்திருந்தாலும், தனது முதல் படத்தில் ஹீரோவாக வசூலிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசையினால் தான் இந்தப் படம் ஓடியதாக ஒரு கருத்தும் ரசிகர்கள் மத்தியில் உலாவுகிறது. அண்மையில் தான் இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சன் நெக்ஸ்ட்டில் இந்தப் படம் இன்று வெளியாகிறது.
கதைக்களம்:
தேவதாஸ் என்ற கிளர்ச்சியாளர் மற்றும் போராளி, ஒரு சிறிய குழுவை வழிநடத்தி வருகிறார். ஒரு விவசாயியின் குடும்பத்திற்கு ஆதரவாக அவர் குரல் கொடுக்கும்போது, ஒரு கும்பலின் இலக்காக மாறுகிறார்.
அதைத் தொடர்ந்து பார்வதி என்ற பெண்ணைக் காதலிக்கும் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத சோகம் ஏற்படுகிறது. இது பழிவாங்கும் உணர்வைத் தூண்டுகிறது. பின்னர் பார்வதியைப் போன்ற தோற்றமளிக்கும் சந்திரா என்ற பெண்ணைச் சந்தித்து அவளது கடந்த காலச் சிக்கல்களிலிருந்து அவளை மீட்க உதவுகிறார். எதிரிகளை எதிர்த்துப் போராடுவதுடன், தன் தந்தையுடனான உறவைச் சரிசெய்து விவசாயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதுமே இப்படத்தின் முக்கியக் கதையாகும்.
ஜிடிஎன் (GDN)
ஜிடிஎன் என்பது மாதவன் நடிப்பில், கிரிஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு சுயசரிதை திரைப்படமாகும். பிரியா மணி, சத்யராஜ், துஷாரா விஜயன், ஜெயராம் மற்றும் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுயசரிதை படமான ஜிடிஎன் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

கதைக்களம்:
இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான கோபாலசுவாமி துரைசுவாமி நாயுடுவின் (GD Naidu) வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மிக எளிய பின்னணியில் இருந்து வந்து, போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னோடியாக அவர் எவ்வாறு உயர்ந்தார் என்பதை இப்படம் விவரிக்கிறது. இயந்திரங்கள் மீதான அவரது ஆர்வம், பேருந்து போக்குவரத்து சாம்ராஜ்யத்தை உருவாக்குவது, பல்வேறு புரட்சிகரமான கண்டுபிடிப்புகள், சர்வதேச அளவிலான முயற்சிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் என அவரது உத்வேகம் நிறைந்த பயணம் இப்படத்தில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. கல்வி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பையும் இப்படம் சிறப்பித்துக் கூறுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10)
தமிழ் சின்னத்திரையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த புதிய சீசன், செப்டம்பர் 6ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் துவங்குகிறது. இந்த நிகழ்ச்சி துவங்க இன்னும் இரு தினங்கள் இருந்தாலும், ஏற்கனவே, ‘காமன் மேன்’ என்ற பெயரில் பாமர மக்களில் இருந்து ஒரு போட்டியாளரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் இதுவாகும். புதிய போட்டியாளர்கள் மற்றும் சுவாரஸ்யமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களைக் கவர்வதற்காக பிக் பாஸ் சீசன் 10 காத்திருக்கிறது.
பிக்பாஸ் தெலுங்கு சீசன் 10 (Bigg Boss Telugu Season 10)
தெலுங்கு சின்னத்திரையின் மிகப்பிரபலமான இந்த ரியாலிட்டி ஷோவின் புதிய சீசன், ‘தசாவதாரம்’ என்ற சிறப்பான கருப்பொருளுடன் களமிறங்குகிறது. வழக்கம் போல் புதிய போட்டியாளர்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் இந்நிகழ்ச்சி ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜுனா அகினேனி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) அன்று இந்த நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. எனவே, ரசிகர்களுக்கு அடுத்த 100 நாட்களுக்கு பொழுது போக்கிற்கு பஞ்சமிருக்காது.




