கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லேப்டாப் உள்ளிட்ட முக்கியமான பொருட்களுடன் தவறவிட்ட கைப்பையை, நேர்மையான டெலிவரி ஊழியர் ஒருவர் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவர் வெளியிட்டுள்ள Instagram Reels வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது அக்காவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவருடன் இருந்த கைப்பை எதிர்பாராத விதமாக சாலையில் தவறி விழுந்துள்ளது.
வீட்டிற்கு சென்ற பின்னரே கைப்பை தொலைந்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதிலும் அலுவலக லேப்டாப் மற்றும் முக்கியமான பொருட்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக தாங்கள் பயணித்த சாலை முழுவதும் தேடியுள்ளனர். ஆனால், கைப்பை கிடைக்கவில்லை.
இதையடுத்து அருகில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்றதாகவும், சம்பவம் தங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது இல்லை எனக் கூறி வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதனால் காவல் நிலையங்களுக்கு இடையே அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிர்பாராத தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் இருந்து வந்த அந்த அழைப்பில், “நீங்கள் தொலைத்த கைப்பை எங்களிடம் பத்திரமாக உள்ளது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்குச் சென்ற அந்தப் பெண், தனது கைப்பையைப் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் அதைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த அலுவலக லேப்டாப் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எந்தவித சேதமும் இன்றி பத்திரமாக இருந்ததை கண்டு நிம்மதி அடைந்துள்ளார்.
கைப்பை எவ்வாறு காவல் நிலையத்திற்கு வந்தது என விசாரித்தபோது, சாலையில் கிடந்த கைப்பையை டெலிவரி ஊழியர் ஒருவர் கண்டெடுத்து, அதனை பாதுகாப்பாக காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது விலை உயர்ந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கைப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த டெலிவரி ஊழியருக்கும், தகவல் தெரிவித்து உதவிய காவல்துறையினருக்கும் அந்தப் பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒருபுறம் காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்க முயன்றபோது ஏற்பட்ட அலைக்கழிப்பு வேதனை அளித்ததாகவும், மறுபுறம் தனது உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்த டெலிவரி ஊழியரின் நேர்மை மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த Instagram Reels வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நேர்மையுடன் கைப்பையை ஒப்படைத்த டெலிவரி ஊழியருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுடன் தொலைந்த கைப்பையை டெலிவரி ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





