கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது, யாரும் எதிர்பாராத நிலையில் தான் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
இதையடுத்து, பெரியசாமி தனது புகார் குறித்து காவல்துறையினரிடம் வேதனையுடன் தெரிவித்தார்.
தன்னை பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட சிலர் தாக்கி துன்புறுத்தியதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டும் இதுவரை தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
அப்போது, “எனக்கு நியாயம் வழங்காவிட்டால் பரவாயில்லை, என்னை நேராக தூக்குமேடையிலாவது ஏற்றுங்கள்” என கண்ணீருடன் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video
பெரியசாமியிடம் பேசிய காவல்துறையினர், அவரது புகாரை மனுவாக அளிக்குமாறு அறிவுறுத்தியதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தினர். பின்னர், அவரை விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியசாமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆட்டோ ஓட்டுநரின் தீக்குளிப்பு முயற்சியால் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





