கோவை: கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை கண்டித்து அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பாலக்காடு சாலை மதுக்கரை பகுதியில் பிரபல சிமெண்ட் நிறுவனமான ஏசிசி சிமெண்ட் நிறுவன ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தை அதானி குழுமத்தினர் வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் அப்பகுதியில் பெருமளவில் காற்று மாசு அடைந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர். பல கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக போராடியும் தீர்வு கிடைக்காததால் இன்றும் பாலக்காடு பிரதான சாலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலையிலிருந்து அதிகளவு புழுதி வெளியேறி குடிநீர் மற்றும் வீடுகளிலும் அதிக அளவிலான சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பல்வேறு விதமான சுவாச நோய்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பலரிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பெயரளவில் மட்டுமே ஆய்வு நடத்தி செல்வதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் சோதனை நடத்துவதற்கு முன்பாகவே அது குறித்து ஆலை நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்துவிட்டு அதிகாரிகள் வருவதாகவும் கூறிய அவர்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
அமைச்சர் விக்னேஷ் தேர்தலுக்கு முன்பு வரும் போது இப்பிரச்சனை பற்றி பேசியதாகவும் ஆனால் தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.





