கோவை: இந்தாண்டின் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் கூட இல்லாத நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்க, தமிழக அரசு சிலக் கட்டுப்பாடுகளையும், வேண்டுகோளையும் விதித்துள்ளது.
மெகா பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் விநாயகர் சதுர்த்தி விழா, இந்தாண்டு செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், அங்கு தொடர்ந்து 10 நாட்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும். ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக, 3 அல்லது 5 நாட்கள் வரை மட்டுமே கொண்டாட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கிராமப்புறங்களில் 3 நாட்களும், நகர்ப்புறங்களில் 5 நாட்களும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படும். கடந்தாண்டு (2025) தமிழகம் முழுவதும் பொதுஇடங்களில் 38,600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல், ஹிந்து முன்னணி, விஎச்பி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளால் மட்டும் தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 2024ல் 35,800 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
ஆயிரக்கணக்கில் சிலைகள்…
கோவையைப் பொறுத்தவரையில் கடந்தாண்டு மொத்தம் 2,353 விநாயகர் சிலைகள் பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. அதில், கோவை மாநகரப் பகுதிகளில் 725 சிலைகளும், புறநகர் பகுதிகளில் 1,628 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஹிந்து முன்னணி சார்பில் மட்டும் கோவையில் சுமார் 5,001 சிலைகள் வைக்கப்பட்டன.

இந்தாண்டும் அதேபோல அதிகளவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன. சுமார் 2,500 சிலைகள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தமிழர் பண்பாடும், இந்து சனாதனமும் ஒன்றே,’ என்ற தலைப்பில், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட ஹிந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள், 3 அடி முதல், 10 அடி வரை தயார் செய்யப்படுகிறது.
முதல்வர் ஸ்டெயிலில்…
தமிழகத்தில் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளும் தமிழகத்திற்கு வரத்துவங்கி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஸ்டெயில் விநாயகர் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், பாகுபலி விநாயகர், சைக்கிள் ஓட்டும் விநாயகர், பைக் ஓட்டும் விநாயகர் என விதவிதமான டிசைன்களில் விநாயகர் சிலைகள் கடந்தாண்டுகளில் உருவாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இந்தாண்டு சட்டசபையில் சைகை செய்த முதல்வர் விஜயின் ஸ்டெயிலை செய்யும் விநாயகர் உருவாக்கப்பட்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், உண்மையான சிலையா? அல்லது ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்டு, டிரெண்டாக்கப்பட்டுள்ளதா? என்ற தகவல் ஏதும் உறுதியாகவில்லை.
விசர்ஜனம்
கோவை நகர்ப்புறங்களில் 18ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட இருக்கிறது. புறநகர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் 16ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. கோவை நகரைப் பொறுத்தவரையில், மாநகரில் பிரதிஷ்டை செய்யப்படும் மிகப்பெரிய சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் தான் கரைக்கப்படுகின்றன. அதேபோல, குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், குனியமுத்தூர் குளம், வெள்ளக்கிணறு குளம் ஆகியவற்றில் கரைக்கப்படும்.

கோவை புறநகரைப் பொறுத்தவரையில் மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியிலும், சிறுமுகை, தேக்கம்பட்டி, இலகம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இந்த விசர்ஜனம் செய்யப்படும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
அறிவுரை
இந்த நிலையில், இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
- களி மண்ணால் செய்யப்பட்டது மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
- சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின் பயன்படுத்தப்படலாம்.
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
- சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
- சிலைகளை அழகு படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.
சுற்றுச்சூழலில் பாதுகாப்பில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிலைகளை பிரதிஷ்டை செய்தவர்கள் செய்ய வேண்டியவை
சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலையைப் பயன்படுத்துங்கள்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்கார பொருட்களை பயன்படுத்தவும்
சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.
அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்கக்கூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.
பிரசாத விநியோகத்திற்கு மக்கும் / மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.
அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.
அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.

சிலைகளை பிரதிஷ்டை செய்தவர்கள் செய்யக்கூடாதவை
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது.
சிலைகளை அலங்கரிக்க, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயனங்கள் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.
சிலைகளின் மேல் பூசிற்கும், அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற ரசாயனசாயங்கள் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்தக் கூடாது.
வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே தூக்கியெறியக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது.
பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது.
அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.
பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது.
ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலட்சியம் வேண்டாம் ப்ளீஸ்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுபவர்கள், தற்போது நேபாளத்தில் இயற்கையின் கோபத்தால் ஏற்பட்ட விளைவுகளை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஆகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த வேண்டும் என்று NCC சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.




