கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படிக்கலாம்.
கஞ்சா பறிமுதல்
கோவை கரும்புக்கடை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புட்டுவிக்கி ரோட்டில் உள்ள ஜலகண்டேஸ்வரன் கோயில் அருகே உள்ள காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த முபீனா (47), காந்திபுரத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீத் (46), ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த முகமத் ஜியாவுதீன் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், 4 செல்போன்கள் மற்றும் ரூ.19,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
லாரி டிரைவர் மீது தாக்குதல்
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). லாரி டிரைவரான இவர், கடந்த 5 ஆண்டுகளாக கோவை அடுத்த துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் தங்கி, தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மணிகண்டன், தனது சக ஊழியரான திருநெல்வேலி பொட்டல்புதூரை சேர்ந்த ரவிக்குமார் (40) என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது போதையில் இருந்த இருவருக்கும் இடையே சம்பளம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார், மணிகண்டனை தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு ராடால் தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் மணிகண்டனுக்கு மார்பு மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரைகள்
கோவை சிங்காநல்லூர் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, இருகூர் சுந்தராம்பாள் கோயில் அருகே நின்றிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
Also Read: கோவை பாரில் குடிபோதையில் மோதல்: பயங்கரமான Fight காட்சிகள் உள்ளே!
இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் ராமநாதபுரம் அம்மன்குளத்தை சேர்ந்த நவீன் (28), வெள்ளலூரை சேர்ந்த சுபாஷ் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 280 போதை மாத்திரைகள், 1.250 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருசக்கர வாகனங்கள் மீட்பு
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் யாரும் உரிமை கோராமல் நீண்ட நாட்களாக கிடக்கும் இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு இடங்களில் யாரும் உரிமை கோராமல் கிடந்த 74 இருசக்கர வாகனங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனங்களை மீட்டனர்.
மேலும், இந்த இருசக்கர வாகனங்கள் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டு, குற்றவாளிகளால் விட்டுச் செல்லப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குற்றச்செய்திகள்: கஞ்சா பறிமுதல், போதை மாத்திரைகள் விற்பனை, லாரி டிரைவர் மீது தாக்குதல், 74 இருசக்கர வாகனங்கள் மீட்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள்.





