கோவை: கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள், மின் ஒயர்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. குடியிருப்புகள் அருகே ஏற்பட்ட தீயால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை அருகே வீரகேரளம் பகுதியில் செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள், மின் ஒயர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததால், தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் குடோனில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி, சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த குடோனை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. குடோனில் ஏற்பட்ட தீ அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் சிலர் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் வீரகேரளம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
VIDEO
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகின்றனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களுக்கு மேல் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மின் ஒயர்கள் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகளவில் இருந்ததால், தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரும்புகையும் தொடர்ந்து வெளியேறி வருகிறது.





