கோவை : கோவை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் கிடைக்காமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன. இதனால் சாலையோரங்கள், குளம், குட்டை மற்றும் புறம்போக்கு இடங்களில் குப்பைகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மயிலம்பட்டி, முதலிபாளையம், குரும்பபாளையம், கரியாம்பாளையம், வெள்ளானைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும், பல இடங்களில் பொதுமக்கள் ஒரே இடத்தில் அனைத்து வகையான குப்பைகளையும் கலந்து வழங்குவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உள்ளாட்சி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வீடு வீடாக சென்று குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
ஒருபுறம் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொண்டு சென்று கொட்டுவது என்பதும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஒரு ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மற்றொரு ஊராட்சி பகுதியில் கொண்டு சென்று கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், குப்பை மேலாண்மை பணியில் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பயன்படுத்தப்படாமல் வறண்டு கிடக்கும் பழைய பாசன கிணறுகளை குப்பைகளை கொட்டி நிரப்புவதற்காக பயன்படுத்தலாமா என சில அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், தடுப்பணைகளை தூர்வாரி மழைநீரை சேமிப்பதுடன், வற்றிய பாசன கிணறுகளை தூர்வாரிய மண்ணை கொண்டு மூட வேண்டும் என விவசாயிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, பன்னிமடை, வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள பாசன கிணறுகள் குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், பாசன கிணறுகளில் குப்பைகளை கொட்டி மூடினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே சில கிணறுகளில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதனால் நீர்வளம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கோவை கிராம ஊராட்சிகளில் குப்பை மேலாண்மைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், குப்பைகளை கிணறுகளில் கொட்டும் நடவடிக்கையை தவிர்த்து முறையான கழிவு மேலாண்மை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை கிராம ஊராட்சிகளில் குப்பை கொட்ட இடமின்றி உள்ளாட்சி அமைப்புகள் திணறல்.
panchayats and waste management issue





