கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை குச்சியால் அடித்ததாக புகார் எழுந்த நிலையில், பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை அருகே குஞ்சூர் பகுதியில் பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக கிருஷ்ண பிரியா மற்றும் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் சுமார் 43 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தலைமை ஆசிரியை கிருஷ்ண பிரியா அந்த மாணவியை குச்சியால் முதுகுப் பகுதியில் அடித்ததாக புகார் எழுந்தது.
இதில் மாணவிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது, மாணவியை அடித்த சம்பவம் தெரியாமல் நடந்துவிட்டதாக தலைமை ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, காயமடைந்த மாணவியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், பள்ளியில் மாணவிகள் சிலர் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்களும் வெளியானதாக கூறப்படுகிறது.
மாணவியை தாக்கியதாக எழுந்த புகார் மற்றும் மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் தங்குமிட வசதிகள், அவர்களிடம் மேற்கொள்ளப்படும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி சூழல் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலைமை ஆசிரியை கிருஷ்ண பிரியா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். தொடர்ந்து, சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக தலைமை ஆசிரியை கிருஷ்ண பிரியாவை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாணவியை குச்சியால் அடித்ததாகவும், மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகவும் எழுந்த புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





