கோவை :கோவையில் கடந்த 3 மாதங்களில் 4 கொலை வழக்குகளில் சிறுவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் வழக்குகளை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி இளைஞர் நீதிக்குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவையில் சமீபகாலமாக சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் சிறுவர்கள் தொடர்புடையதாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செட்டிப்பாளையம் போலீஸ் எல்லையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு, சிங்காநல்லூரில் பெயிண்டர் மணிகண்டன் கொலை வழக்கு, 58 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் கிணத்துக்கடவில் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கு என கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 கொலை வழக்குகளில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது, அவர்களை தண்டிப்பதைவிட நல்வழிப்படுத்தும் நோக்கில் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம் விசாரணை நடத்தி முடிவுகளை எடுக்கும். சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களை சீர்திருத்தும் வகையிலேயே பெரும்பாலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் வழக்குகளில், அவர்களின் வயது மட்டுமின்றி பல்வேறு அம்சங்களும் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.
சிறுவனின் மனமுதிர்ச்சி, குற்றத்தில் ஈடுபட்டபோதைய மனநிலை, தற்போதைய மனநிலை, குற்றத்தின் விளைவுகளை புரிந்துகொள்ளும் திறன், உடல் மற்றும் மன வளர்ச்சி, மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மேலும், சிறுவனை மீண்டும் சமூகத்தில் அனுமதித்தால் அவரது எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட அம்சங்களும் பரிசீலிக்கப்படுகின்றன.
இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் அருண்குமார், உறுப்பினர்கள் ஜெனிபர் புஷ்பலதா மற்றும் சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 4 வழக்குகளிலும் குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவில், 4 கொலை வழக்குகளையும் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கான வழக்கு ஆவணங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இளைஞர் நீதிக்குழுமத்தினர் கூறுகையில், “சிறுவர்களை குற்றவாளிகளாக அணுகுவது இளைஞர் நீதிக்குழுமத்தின் நோக்கம் அல்ல. அதேநேரத்தில், கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் சிறுவர்களின் மனமுதிர்ச்சி மற்றும் குற்றத்தின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, இந்த 4 வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது” என்றனர்.





