கோவை : கோவை ஆர்.எஸ்.புரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் பிரச்சினையால் மனமுடைந்ததாக கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சையதுல்லா (25) என்பவர் தனது தம்பி சாங்கய் (24) உடன் கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே. வீதியில் உள்ள தங்க நகை பட்டறையில் தங்கி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று சையதுல்லா பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சையதுல்லா, கடந்த ஒரு ஆண்டாக இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்ததாகவும், தற்போது அந்த பெண் தன்னுடன் பேச மறுத்ததால் மனமுடைந்ததாகவும் சக தொழிலாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சையதுல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





