கோவை: 2 பவுன் தங்கச் செயினுக்காக மூதாட்டியை கொலை செய்ததாக கூறப்படும் இட்லி கடை பெண் உரிமையாளரை, CCTV காட்சிகள் மற்றும் உடைந்த வளையல் தடயத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் வெத்தலைக்காரர் வீதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (54), கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தனியாக வசித்து வந்த அவரின் வீட்டில் இருந்த 2 பவுன் தங்கச் செயின் காணாமல் போனது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் குனியமுத்தூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கொலை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, மூதாட்டியின் உடல் அருகே உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் கிடைத்தன.
இதனிடையே, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான CCTV காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இட்லி கடை உரிமையாளர் விஜயலட்சுமி (42), மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று வெளியே வரும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், வீட்டிற்குள் சென்றபோது கைகளில் வளையல் அணிந்திருந்த அவர், வெளியே வரும்போது வளையல் இல்லாமல் இருந்ததும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூதாட்டி தனியாக வசிப்பதை அறிந்து 2 பவுன் தங்கச் செயினை திருட முயன்றதாகவும், அப்போது மூதாட்டி சத்தம் போட்டதால் அவரது வாயை பலமாகப் பொத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழந்ததாகவும், அந்த நேரத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் தனது கண்ணாடி வளையல்கள் உடைந்து விழுந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
CCTV காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த உடைந்த வளையல் தடயங்களின் அடிப்படையில் இட்லி கடை பெண் உரிமையாளர் விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறிய தடயங்களையும் வைத்து குற்றவாளியை விரைவாக கண்டறிந்த தனிப்படை போலீசாரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.





