கோவை: கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதூர் பகுதியில் கிளினிக் முன்பு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்திபுரம் நியூ சித்தாபுதூர் விகேகே மேனன் ரோட்டில் உள்ள கிளினிக் முன்பு நேற்று முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், முதியவரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 70 வயது மதிக்கத்தக்க அவர், வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறந்த முதியவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது அடையாளம் மற்றும் உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




