கோவை : பொள்ளாச்சி – கோவை இடையே இயக்கப்பட்ட தனியார் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணியிடம் தங்கத் தாலியை திருடிய பெண் கையும் களவுமாக பிடிபட்டார். அவருடன் வந்த மற்றொரு பெண் தப்பி ஓடிய நிலையில், அவரை உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி – கோவை இடையே இயக்கப்படும் தனியார் பஸ்சில் இனியவன் (23) என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் அந்த பஸ் உக்கடம் காவல் நிலையம் எதிரே வந்து கொண்டிருந்தது.
அப்போது பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி 2 பெண்கள், சக பயணியின் கைப்பையில் இருந்து பொருளை திருட முயன்றதை நடத்துனர் இனியவன் கவனித்தார்.
இதையடுத்து உடனடியாக சுதாரித்த அவர், சக பயணிகளின் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடிக்க முயன்றார். பஸ் நிறுத்தப்பட்டதும் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் இருந்து நைசாக தப்பி ஓடிவிட்டார்.
மற்றொரு பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பொள்ளாச்சி குள்ளக்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரது மனைவி முத்துமாரி (23) என்பது தெரியவந்தது.
மேலும், அந்த பெண்ணிடம் இருந்து பயணியிடம் திருடப்பட்ட 2 கிராம் தங்கத் தாலி மீட்கப்பட்டது.
இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மற்றொரு பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





