கோவை: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில், ஷார்ஜாவில் இருந்து வந்த பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்கத்தைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை பீளமேட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நவம்பர் 2-ஆம் தேதி ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, பெண் பயணி ஒருவரைத் தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், அவர் தனது உள்ளாடைக்குள் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடமிருந்து 808.27 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் மீட்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.1.15 கோடி எனவும் சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்தீர்வை செலுத்தாமல் மறைத்து எடுத்து வரப்பட்ட அந்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, தங்கம் எங்கிருந்து பெறப்பட்டது, யாரிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்துப் பெண் பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் தங்கக் கடத்தல் கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த பெண் பயணியிடம் ரூ.1.15 கோடி மதிப்பிலான 808.27 கிராம் தங்கத்தைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.






