கோவை: கோவை புலியகுளத்தில் கழிப்பறை அருகே நின்றிருந்ததைத் தட்டிக்கேட்ட தாய், மகளைத் தாக்க முயன்று, வீட்டுக் கதவை உடைத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை புலியகுளம் எரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (24). சமையல் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில், இவரது தாயார் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
அப்போது, கழிப்பறை அருகே வாலிபர் ஒருவர் நின்றிருந்துள்ளார். இந்த நேரத்தில் இங்கு ஏன் நிற்கிறாய் என முத்துலட்சுமியின் தாயார் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு வெளியே வந்த முத்துலட்சுமியும் அந்த வாலிபரைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்க முயன்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த தாயும் மகளும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். இருப்பினும், அந்த வாலிபர் வீட்டின் கதவை உதைத்து உள்பக்கத் தாழ்ப்பாளை உடைத்ததுடன், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரும் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததைப் பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து முத்துலட்சுமி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தகராறில் ஈடுபட்டவர் புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.






