கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட்டு வரும் பயோ-கேஸ் ஆலை கட்டுமான பணிகளுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இதுவரை எந்தவொரு அனுமதி வேண்டி விண்ணப்பங்கள் வரவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ-கேஸ் தயாரிக்கும் ஆலை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
ஏற்கனவே வெள்ளலூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குப்பைக்கிடங்கால் காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு இதுபோல பயோ- கேஸ் தயாரிப்பதற்கான ஆலை, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலை போன்ற திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆலையின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், பணிகளை விரைவுபடுத்தி, திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே ஆலைக்கு உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து, குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழுவினர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (கோவை தெற்கு) பொது தகவல் அலுவலரிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், இந்த ஆலை அமைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளதா?, ஆலை அமைப்பதற்கான ஒப்புதல் மற்றும் இயக்குவதற்கான ஒப்புதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதா?, என்பது உள்ளிட்ட சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இதற்கு கோவை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் தரப்பில் தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆலைக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் கோரி இதுவரை விண்ணப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் பயோ கேஸ் ஆலை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அடிப்படை ஒப்புதலுக்கு கூட விண்ணப்பிக்கப்படாமல் பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: மருதமலை சாலை சீரமைப்புப் பணிகள்- அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு…
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோகேஸ் ஆலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில், ஒப்புதல் கோரி இதுவரை விண்ணப்பம் வரவில்லை என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆர்டிஐ பதிலில் தெரிவித்துள்ளது.





