கோவை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, காரமடையைச் சேர்ந்த 64 வயது தொழிலதிபரிடம் ரூ.28 லட்சத்து 7 ஆயிரம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அண்மையில் வந்த குறுஞ்செய்தியில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியில் இருந்த செல்போன் எண்ணை அவர் தொடர்புகொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய தொழிலதிபர், அந்த நபர் தெரிவித்த வங்கிக் கணக்குக்குப் பல தவணைகளில் மொத்தம் ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். சொன்னபடி லாபத் தொகை வழங்கப்படவில்லை என்றும், முதலீடு செய்த பணமும் திருப்பித் தரப்படவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேட்க அந்த நபரைத் தொழிலதிபர் மீண்டும் தொடர்புகொண்டபோது, செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.




