கோவை : கோவை டாடாபாத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரின் வீடியோக்களை அனுமதியின்றிப் பதிவிட்டு, அவரைப் பற்றி அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திருச்செந்தூரைச் சேர்ந்த யூடியூபர் மணிகண்டனை (37) கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் ஊட்டியில் கைது செய்தனர்.
டாடாபாத்தைச் சேர்ந்த 50 வயது பெண், சொந்தமாகத் தொழில் நடத்தி வருகிறார். தான் தயாரிக்கும் பொருட்களின் செய்முறை மற்றும் விற்பனை தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.
வீடியோக்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகப் புகார்
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனது வீடியோக்களை மணிகண்டன் அனுமதியின்றி எடுத்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் யூடியூப் சேனலிலும் பதிவிட்டதாக அந்தப் பெண் புகார் அளித்தார். தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பயன்படுத்தி, தன்னைப் பற்றியும் தான் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் பரப்பியதாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மணிகண்டனின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் 16 வழக்குகள்
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸார், மணிகண்டன் ஊட்டியில் தலைமறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான போலீஸார் நவம்பர் 14 காலை ஊட்டிக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக மணிகண்டன் மீது தமிழ்நாடு முழுவதும் 16 வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




