கோவை : நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் நேற்று இரவு இருசக்கர வாகனமும் டெம்போ டிராவலரும் மோதிக்கொண்ட விபத்தில், பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாலையில் நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு இந்த மேம்பாலத்தின் வழியாக இளைஞர்கள் இருவர் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையில் வந்த டெம்போ டிராவலர், அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது.
பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர்
மோதலின்போது இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர்களில் ஒருவர் நிலைதடுமாறி மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்களின் அடையாளம் குறித்து விசாரணை
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த இளைஞர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை அறிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது டெம்போ டிராவலர் மோதியதில், பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




