கோவை : ஆன்லைன் மோசடியில் பெறப்படும் பணத்தைப் பரிமாற்றம் செய்ய, பொதுமக்களுக்குப் பணம் கொடுத்து அவர்களது பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வைத்ததாக இருவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 பேரின் வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 25 டெபிட் கார்டுகள், 2 செல்போன்கள் மற்றும் 8 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்களிடம் மோசடி செய்து பெறும் பணத்தை உடனடியாக வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி எடுப்பதற்காக, பிறர் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகளை மோசடிக் கும்பல் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக சிலருக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை கொடுத்து, அவர்களது ஆதார் விவரங்களையும் சிம் கார்டுகளையும் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், அவர்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துப் பணத்தைப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் இருவர் கைது
பலருக்குப் பணம் கொடுத்து வங்கிக் கணக்குகளைத் தொடங்க வைப்பதற்கு இருவர் உடந்தையாக இருந்ததாக, கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், வங்கிக் கணக்குகளைத் தொடங்க வைப்பதற்கு முகவர்களாகச் செயல்பட்டதாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைதான இருவருக்கும் பொதுமக்களிடம் கொடுப்பதற்கான பணத்தை வழங்கியது யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய, பொதுமக்களுக்குப் பணம் கொடுத்து அவர்களது பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வைத்ததாக கோவை சைபர் கிரைம் போலீஸார் இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 பேரின் வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 25 டெபிட் கார்டுகள், 2 செல்போன்கள், 8 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.





