கோவை: திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவை அவினாசி சாலையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் தீப விவகாரம், செஞ்சியில் சிறுமி மாயமான சம்பவம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாநில அரசு மதித்து செயல்பட வேண்டியது கடமை எனத் தெரிவித்தார்.
Also Read: வங்கிக் கணக்கு தொடங்க ரூ.10,000 வரை! கோவை ஆன்லைன் மோசடி வழக்கில் இருவர் கைது
நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பின்னரும், கடந்த கால திமுக அரசும் தற்போதைய அரசும் அதனை ஏற்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், இரண்டு மதங்களுக்கு இடையே தேவையற்ற பகைமையை உருவாக்கும் வகையில் அரசு செயல்படக் கூடாது என்றும், நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முருக பக்தர்களின் விரதம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஆறு நாட்களாக விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள், சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வுடன் தங்களது விரதத்தை நிறைவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டு, முருக பக்தர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
35 நாட்களாகியும் சிறுமி மீட்கப்படவில்லை – அண்ணாமலை கவலை!
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, சிறுமி காணாமல் போய் 35 நாட்களைக் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாதது மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் சிறுமியை மீட்க முடியாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
Also Read: கோவையில் கோர விபத்து மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசு ஈடுபட்டு வரும் நிலையில், 35 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ள சிறுமியை மீட்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சிறுமியின் பெற்றோர் மிகுந்த வேதனையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி, சிறுமியைப் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு மதித்து செயல்பட வேண்டும் என்பதையும், காணாமல் போன சிறுமியை விரைந்து மீட்க வேண்டும் என்பதையும் அண்ணாமலை வலியுறுத்தினார்.





