கோவை: கோவை மாவட்டத்தில் குத்தகை மற்றும் கோவில் நிலங்களில் விவசாயம் மேற்கொள்பவர்களும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் (Farmer ID) மற்றும் ஆதார் ஓடிபி ஒப்புதல் தொடர்பான கட்டாய நிபந்தனைகளில் மத்திய அரசு தளர்வுகளை வழங்கியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடப்பு 2026–2027ஆம் ஆண்டுக்கான ரபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டைக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல் விடுபட்ட விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் பயன்பெறும் வகையில் முக்கியத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்கள் பதிவு செய்துகொள்ள விவசாயி அடையாள எண் (Farmer ID) கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, குத்தகை விவசாயிகள் பதிவு செய்வதற்கு நில உரிமையாளர்களிடம் இருந்து ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக இருந்தது.
இதனால் பேரூராட்சி, நகராட்சி மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், தனிநபர் நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளும் குத்தகை விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
குறிப்பாக, நில உரிமையாளர்களின் ஆதார் ஓடிபி ஒப்புதலைப் பெறுவதிலும், விவசாயி அடையாள எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்வதிலும் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சில விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வேளாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மத்திய அரசிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்தனர்.
தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்படும் தொழில்நுட்ப இடர்ப்பாடுகள் குறித்தும், குத்தகை விவசாயிகள், மலைப்பகுதி மற்றும் நகர்ப்புற விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் மத்திய அரசிடம் விளக்கப்பட்டது.
மேலும், இவர்களுக்கு விவசாயி அடையாள எண் மற்றும் ஆதார் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் ஆகிய கட்டாய நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, 2026–2027ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் மற்றும் ஆதார் ஓடிபி ஒப்புதல் தொடர்பான கட்டாய நிபந்தனைகளில் மத்திய அரசு உரிய தளர்வுகளை வழங்கியுள்ளது.
இதன் மூலம், தனிநபர் மற்றும் கோவில் நிலங்களில் குத்தகை அடிப்படையில் விவசாயம் மேற்கொள்பவர்கள், மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, கோவை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் தகுதியுள்ள நில உரிமையாளர்கள், மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டைக்கடலை ஆகிய ரபி பருவப் பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.





