கோவை: கோவையில் 20 ஏக்கரில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோவையில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த அகாடமிக்கு இடம் தேர்வு செய்யும் பணிகளை, அதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு அடுத்த வாரம் தொடங்கும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோவையில் விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் நேரு விளையாட்டரங்கம் முக்கிய மையமாக உள்ளது. கால்பந்து, தடகளம் ஆகிய போட்டிகளைச் சில நேரங்களில் ஒரே மைதானத்தில் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய சூழலும் உள்ளது.
நேரு விளையாட்டரங்கத்துக்கு எதிரே பூப்பந்தாட்டம், கபடி, வாலிபால் போட்டிகளுக்கான உள்விளையாட்டு அரங்கு உள்ளது. இந்தச் சூழலில், தனியாக ஒலிம்பிக் அகாடமி அமைவது கூடுதல் பயிற்சி வசதிகளை உருவாக்கும் என உள்ளூர் விளையாட்டு வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
“ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்ய, அமைக்கப்பட்டுள்ள தனி குழு கோவையில் அடுத்த வாரம் பணிகளை துவங்கும்,” என மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். அகாடமியில் எந்தெந்த விளையாட்டுகளைச் சேர்ப்பது என்பது குறித்து ஆலோசித்து, அரசுக்குக் கருத்துரு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கால்பந்து, ஹாக்கி, தடகளம் ஆகியவற்றுக்குத் தனித்தனி மைதானங்கள் அமைக்க வேண்டும் என கோவை மாவட்டத் தடகளச் சங்கத்தின் தொழில்நுட்பச் செயலாளர் சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கூடைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளுக்குத் தற்போது பகுதி மேற்கூரையுடன் கூடிய அரங்குகளே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வீரர்களின் வேகம், உடல் இயக்கம் ஆகியவற்றை அளவிட உதவும் நவீனப் பயிற்சி உபகரணங்களும் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
வெளியூரிலிருந்து வந்து பயிற்சி பெறுவோருக்குத் தங்கும் வசதியும், ஊட்டச்சத்து உணவு வழங்கும் உணவகமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து அதிக வீரர், வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி மையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.42.90 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.


