கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்! முதல்வர் விசாரிக்க ஒப்பந்ததாரர் கோரிக்கை

கோவை : கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்ததாக ஒப்பந்ததாரர் திருவெங்கடம் குற்றம்சாட்டி, முதல்வர் தலையிட்டு விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் கழிப்பறை, பூங்கா, குடிநீர்த் தொட்டி, பள்ளி உள்ளிட்டவற்றின் பராமரிப்புப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்படுவதாக ஒப்பந்ததாரர் திருவெங்கடம் குற்றம்சாட்டியுள்ளார். ‘குலுக்கல்’, ‘ஜீரோ கொட்டேஷன்’ ஆகியவற்றின் பெயரில் கூட்டாகச் செயல்பட்டு அரசுப் பணத்தை வீணடிப்பதாகக் கூறிய அவர், முதல்வர் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருவெங்கடம் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சியின் கழிப்பறை, பூங்கா, பள்ளி மற்றும் குடிநீர்த் தொட்டி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

Also Read: போத்தனூர் பிரதான சாலையில் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

Advertisement

டெண்டர் ஒதுக்கீட்டில் குலுக்கல் நடத்தச் சட்டத்தில் இடமிருப்பதாகக் கூறி அதிகாரிகள் தற்போது அந்த முறையைப் பின்பற்றுவதாகவும், ஆனால் குலுக்கல் நடத்தப்படும் விதத்தில் முறைகேடு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“பத்துப் பணிகளுக்குத் தலா பத்துப் பேர் விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பித்த பத்துப் பேரையும் சேர்த்துத் தனித்தனியாகக் குலுக்கல் நடத்த வேண்டும்.

ஆனால், முதல் பணிக்கான குலுக்கலில் தேர்வானவரை அடுத்த குலுக்கலில் சேர்ப்பதில்லை. இரண்டாவது பணிக்கு ஒன்பது பேர், மூன்றாவது பணிக்கு எட்டுப் பேர் என எண்ணிக்கையைக் குறைத்து, இறுதியில் பத்துப் பேருக்கும் தலா ஒரு பணியை ஒதுக்குகின்றனர்,” என்று அவர் கூறினார்.

மாநகராட்சியில் தரவு உள்ளீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள 120 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டிய நிலையில், ரூ.19 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள ரூ.6 ஆயிரம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டெண்டரில் தேர்வான ஒப்பந்ததாரருக்குத் தகவல் தெரிவிக்காமலேயே டெண்டரை ரத்து செய்வதாகவும், வேறொருவருக்கு ஒப்பந்தத்தை இறுதி செய்த பிறகே ரத்து அறிவிப்பை அனுப்புவதாகவும் திருவெங்கடம் குற்றம்சாட்டினார்.

‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் 2 சதவீத கமிஷன் வழங்க நிர்பந்திப்பதே இதற்குக் காரணம் என்றும், லஞ்சமற்ற நிர்வாகத்தை நடத்த மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் கோரப்பட்ட கழிப்பறைப் பராமரிப்பு டெண்டருக்கும், ஜூலை 22-ஆம் தேதி கோரப்பட்ட வ.உ.சி. பூங்கா காவலர் பணிக்கான டெண்டருக்கும் இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்தப் பணிகளில் பழைய ஒப்பந்ததாரர்களுக்கே தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் கூறினார்.

ஒரே அறிவிப்பு எண்ணின் கீழ் இடம்பெற்ற 30 பணிகளில், நான்கு பணிகளை மட்டும் ‘நிர்வாகக் காரணம்’ எனக் கூறி ரத்து செய்துவிட்டு, அதே அறிவிப்பின் கீழ் மற்ற பணிகளுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய முறைகேடுகளால் ஆண்டுக்கு சுமார் ரூ.50 கோடி வரிப்பணம் வீணாவதாக அவர் குற்றம்சாட்டினார்.

முதல்வரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், குறைதீர் முகாம் மற்றும் டி.எம்.இ. ஆகியவற்றில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று திருவெங்கடம் தெரிவித்தார்.

அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆடியோ, வீடியோ பதிவுகளும், தலைமைச் செயலகக் கடிதங்களின் நகல்களும் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், முதல்வர் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...