கோவை: இயற்கையான பிரசவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மருத்துவக் காரணமின்றி மேற்கொள்ளப்படும் சிசேரியன் பிரசவங்களைத் தவிர்க்க வலியுறுத்தியும் கோவையில் இன்று தேசிய அளவிலான விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இந்திய மருத்துவச்சியர் சங்கத்தின் (SOMI) கோவை கிளை சார்பில், பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.
‘இயற்கையான பிரசவம் ஒரு பாதுகாப்பான தேர்வு. தேவையற்ற சிசேரியன் பிரசவங்களுக்கு வேண்டாம் என்று கூறுவோம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைப்பயணம் நடைபெற்றது. இயற்கையான பிரசவம் குறித்தும், மருத்துவ ரீதியாக அவசியமில்லாத சிசேரியன் பிரசவங்களைத் தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Also Read: இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம்!
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும் அனைவரின் பொறுப்பு என்றும், குறிப்பாக சுகாதாரத் துறையிலும் அது தொடர்பான துறைகளிலும் பணியாற்றுவோருக்கு இதில் முக்கியப் பங்கு இருப்பதாகவும் அவர் பேசினார்.

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என். எம். சுகுமார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். ஸ்ரீ கிரி பிரசாத், கோவை தெற்கு காவல் துணை ஆணையர் ஜி. கார்த்திகேயன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
பாதுகாப்பான, மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையிலான மகப்பேறு பராமரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. கர்ப்பிணிகள் போதிய தகவல்களைப் பெற்று, தங்களுக்குப் பொருத்தமான பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்க ஆதரவளிக்க வேண்டும் என்றும், மருத்துவ ரீதியாக அவசியமில்லாதபோது சிசேரியன் பிரசவத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நடைப்பயணத்தில் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், 30 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் எனச் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். பாதுகாப்பான, மரியாதைமிக்க, மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையிலான மகப்பேறு பராமரிப்பை ஊக்குவிப்பதில் தங்களது உறுதிப்பாட்டைப் பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்தியதாக பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். ஜெயதீபா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


