கரூர் சென்று திரும்பிய பாஜக ஆய்வு குழு- கோவை விமான நிலையத்தில் தெரிவித்த தகவல்கள்…

கோவை: பொதுவாகவே ஒரு நபர் ஆணைய விசாரணை என்பது அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என பாஜக பாராளுமன்ற குழு உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

கரூர் சோக சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்ட பாஜக எம்பிகள் குழுவினர் காலை முதல் அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தும் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டும் விசாரணை நடத்தினர்.அதை தொடர்ந்து கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தேஜஸ்வி சூர்யா மற்றும் அனுராக் தாகூர் ஆகியோர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முன்னதாக பேசிய தேஜஸ்வி சூர்யா, காலை முதல் கரூர் சோக சம்பவம் குறித்து பல தரப்பினரிடமும் அதிகாரிகளிடமும் பேசியதாகவும் அதன் அடிப்படையில் ஐந்து விதமான கேள்விகளை இந்த குழு தமிழக அரசு முன்பாக வைப்பதாகவும் குறிப்பிட்டார்.தவெக பிரச்சார கூட்டம் நடைபெற்ற இடத்தை தேர்வு செய்து கொடுத்தது யார்? பெரிய இடத்தை கொடுக்காமல் சிறிய இடத்தை அனுமதித்திருக்கான காரணம் என்ன? விஜய் வரும்பொழுது மின்வெட்டு நடந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து மக்கள் தங்களிடம் தெரிவித்ததாகவும் அந்த கூட்டத்திற்கும் அந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லாத பலர் விஜய் வந்த 15 நிமிடத்திற்குள் உள்ளே வந்துள்ளதாகவும் கூறிய அவர், இவர்களெல்லாம் யார் என்ற கேள்வி எழுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழக உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளதாகவும் ஏன் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு போடவில்லை என்றும் இவ்வளவு பேர் அங்கு வருவார்கள் என்று காவல்துறைக்கு தெரியாதா என்றும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்லாமல் எதற்காக 25 நிமிடம் பயணம் செய்யும் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்றார்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலை முதல் நடத்திய விசாரணை குறித்த தகவல்கள் அனைத்தையும் அறிக்கையாக ஓரிரு தினங்களில் மத்திய அரசிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறினார். மேலும் விஜய் வந்தபோது செருப்பு வீசிய நபர்கள் யார் என்பது தெரியவில்லை எனவும் அது குறித்தும் பொதுமக்கள் தங்களிடம் தெரிவித்ததாகவும் கூறியதுடன் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் என்பது போதாது என்றும் பொதுவாகவே அரசு அமைக்கும் ஒரு நபர் ஆணையம் என்பது அரசுக்கு சாதகமான அறிக்கையையெ தரும் என்றும் கூறிய அவர், அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற IPL இறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஆர் சி பி அணியின் அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த சூழலில் அது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்ததாகவும் ஆனால் அந்த ஒரு நபர் ஆணையம் ஆர் சி பி நிர்வாகத்திற்கு எதிராகத்தான் அறிக்கை கொடுத்தார்கள் என்றும் எனவே இந்த ஒரு நபர் ஆணையம் போதாது என்று மக்கள் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதை தொடர்ந்து பேசிய அனுராக் தாகூர், விஜய் பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார் என்றும் போலீசார் எத்தனை பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் எத்தனை பேர் காரில் இருந்தார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பேசுபவர்களின் குரல்களை இந்த அரசு நசுக்குகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

தாங்கள் திரட்டிய தகவல்களை இந்த வார இறுதிக்குள் மத்திய அரசிடமும் பிரதமரிடமும் கொடுக்க இருப்பதாகவும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு கொடுக்கலாம் என்றும் ஒரு நபர் கமிஷன் விசாரணை நேர்மையாக இருக்கும் என்றாலும் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடைபெற சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேம்பாலத்தில் நடத்து வந்த அண்ணாமலை- வைரல் வீடியோ காட்சிகள்…

கோவை: ஆர்ப்பாட்டத்திற்கு ஜிடி மேம்பாலத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணமலை நடந்து வந்தார். கோவையில் NDA கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்தபோது GD பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாஜக மாநில முன்னாள்...

Video

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேம்பாலத்தில் நடத்து வந்த அண்ணாமலை- வைரல் வீடியோ காட்சிகள்…

கோவை: ஆர்ப்பாட்டத்திற்கு ஜிடி மேம்பாலத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணமலை நடந்து வந்தார். கோவையில் NDA கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்தபோது GD பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாஜக மாநில முன்னாள்...