கோவை: தொழில்முறை சிவில் தகராறை குற்ற வழக்காக மாற்றக் கூடாது என கூறி கோவை மாநகர குற்றப்பிரிவு எப்ஐஆரை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்தவர் சேதுராமன். இவர் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த நிறுவனத்திடம் இருந்து கோவையை சேர்ந்த ஒரு நிறுவனம் சுமார் ரூ.2 கோடியே 64 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான உளுந்தம்பருப்பை கொள்முதல் செய்தனர்.
கொள்முதல் செய்த பொருட்களுக்கான தொகையில் ஒரு பகுதியை செலுத்திய நிலையில், ரூ.1 கோடியே 45 லட்சத்து 96 ஆயிரம் நிலுவையாக இருந்தது. இந்த நிலுவைத் தொகையை பலமுறை கேட்டும் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே மீதித் தொகைக்கு இரு காசோலைகளை வழங்கி உள்ளனர். ஆனால், அந்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியது.
இதனால் உளுந்தம்பருப்பு விநியோகத்தை சேதுராமன் நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து சேதுராமன் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பணம் தராமல் மோசடி செய்ததாக கோவை வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன், காஜா உசேன், பரத் , ஆனந்த், கீதாஞ்சலி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கீதாஞ்சலி கோவை வக்கீல் மகேஸ்வரன் என்பவர் மூலம் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்து வந்தார். இந்த நிலையில் புகார் அளித்த சேதுராமன் தரப்பில் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி, இது இரு தரப்பினருக்கும் இடையிலான தொழில்முறை பணப் பரிவர்த்தனை தொடர்பானதாகும். சிவில் தகராறுகளுக்கு குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய கூடாது என கூறி கீதாஞ்சலி உட்பட அனைத்து நபர்கள் மீதான வழக்கை கோவை மாநரக குற்றப்பிரிவு போலீசார் ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.





