கோவை: அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பணம் மற்றும் மதுபானம் கொடுத்து வாக்குகளைப் பெற்றதாகக் குற்றம்சாட்டினார்.
தற்போதைய தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், கடந்த பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக தனது நிலைப்பாடு குறித்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நீட் தேர்வு, காவிரி நீர்ப் பிரச்சினை, இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த நான்கு மாதங்களில் தமிழகத்தை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்றார். மேட்டூர் அணையில் தற்போது 30 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், கர்நாடக அரசு உரிய தண்ணீரை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாகவும் தெரிவித்தார். அரிசி விலையும் உயர்ந்துள்ளதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
செவிலியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், குரூப் 4 தேர்வின் மூலம் 15 ஆயிரம் பேரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கனிம வளக் கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசுக்கு நிர்வாக அனுபவம் குறைவாக இருந்தாலும், ஏற்கெனவே பணியில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளை மதித்து செயல்பட வேண்டும் என்றார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு மேலும் பாதிக்கப்படலாம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் நலன், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதிமுக–பாமக கூட்டணி குறித்த சமூக வலைதளக் கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், தற்போது பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அதுகுறித்த தகவல்கள் வதந்திகள் என்றும், தாங்கள் அமைச்சர் பதவிகளைக் கேட்கவில்லை, கேட்கப்போவதும் இல்லை என்றும் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனப் பதிலளித்தார்.






