கோவை: கோவையில் எந்தெந்த மருத்துவமனைகள் மூலம், எத்தனை குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சி அமைந்த பிறகு தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இத்திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 28-ம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
அன்றைய தினமே கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை வழங்கினார்.
எத்தனை மோதிரங்கள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜூன் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 1,713 குழந்தைகளுக்கும், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 599 குழந்தைகளுக்கும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த 305 குழந்தைகளுக்கும், வால்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கும் என மொத்தம் 2,647 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Also Read: திறக்கப்பட்டது கோவை குற்றாலம்!
செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்மார்கள் பிரசவத்துக்குப் பிறகு வீடு திரும்பும் நாளில், அந்தந்த மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே தங்க மோதிரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,647 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.






