கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்து எட்டிப்பார்த்ததாகக் கூறப்படும் மர்ம நபரின் சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சூர்யா நகர் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீடுகளின் காம்பவுண்ட் சுவர் மற்றும் கேட்களை ஏறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, வீடுகளுக்குள் எட்டிப்பார்ப்பது போன்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விபரீத நடமாட்டத்தால் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தி, வீடுகளின் காம்பவுண்ட் சுவர்கள் மற்றும் கேட்களை ஏறி உள்ளே நுழைந்து, ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் எட்டிப்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சில வீடுகளின் மாடிப்படிகள் வழியாக மேல்தளத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பதும், அங்கு பொருட்கள் உள்ளனவா என்பதை நோட்டமிடுவதும் போன்ற நடவடிக்கைகளில் அந்த நபர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுவரை ஏறி வீட்டின் மாடிக்குச் செல்லும் காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. அந்தக் காட்சிகளைப் பார்த்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது அந்த சி.சி.டி.வி. வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடுகளுக்குள் நுழைந்து சுற்றித்திரிவதாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவான நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





