கோவை: கோவையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலி மூலம் பழகி, கல்லூரி மாணவர்கள் இருவரை ஓட்டலுக்கு வரவழைத்துத் தாக்கி, அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஸ்கூட்டரை பறித்துச் சென்றதாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய கல்லூரி மாணவர்கள் இருவருக்கு, ஓரினச்சேர்க்கையாளர்கள் பழகுவதற்கான கிரைண்டர் (Grindr) செயலி மூலம் திருச்சியைச் சேர்ந்த தர்ஷன் (23) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில், மாணவர்களை நேரில் சந்திப்பதற்காக தர்ஷன் அண்மையில் கோவைக்கு வந்துள்ளார்.
பின்னர், மாணவர்களைத் தொடர்புகொண்ட அவர், கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகக் கூறி, இருவரையும் அங்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனை நம்பிய மாணவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் தர்ஷன் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, அந்த அறையில் தர்ஷனுடன் மேலும் இரண்டு பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், தர்ஷன் உள்ளிட்ட மூவரும் திடீரென மாணவர்கள் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடமிருந்த இரண்டு செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் அவர்கள் வந்த ஸ்கூட்டர் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருச்சியைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் அவரது நண்பர்களான அகில், விக்னேஷ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.





