கோவை: சூயஸ் திட்டத்தின் கீழ் குடிநீருக்கு அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வரும் நிலையில், இதுகுறித்து கோவை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘‘கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் கட்டணம் கூடுதலாக பட்டியலிடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த இரு இணைப்புகளும் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 26வது வார்டில் உள்ளன. இந்த இணைப்புகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, இந்த பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதும், பழைய பகிர்மான குழாய்கள் பயன்பாட்டில் இல்லை என தெரியவந்தது.
ஆனால் இந்த இரு இணைப்புகளிலும் வீட்டு உரிமையாளர்கள் பழைய மற்றும் புதிய குடிநீர் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, எதன் மூலம் குடிநீர் வந்தாலும் தரை மட்ட தொட்டியில் விழும் வகையில் செய்திருந்தனர்.
இதனால் புதிய இணைப்பில் 24 மணி நேரமும் வரும் நீர், பழைய குடிநீர் இணைப்பு மூலம் பகிர்மான குழாய் மூலம் வெளியேறியுள்ளது கண்டறியபட்டது. பழைய இணைப்பின் மூலம் குடிநீர் வராது என்பதை தெரிவித்து அதனை துண்டித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஏற்று வீட்டு உரிமையாளர்களும் கடிதம் மூலம் இசைவு தெரிவித்துள்ளனர். மற்றபடி குடிநீர் மானி அளவிலோ, பட்டியலிலோ எந்த தவறும் இல்லை.
24 மணி நேர குடிநீர் விநியோகம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் தொடர்கிறது. சூயஸ் நிறுவனம் மாநகராட்சி வழிகாட்டுதல் படி, பணிகளை செய்து வருகிறது. மேலும் குடியிருப்பு அல்லாத வணிக பயன்பாட்டிற்கு உண்டான குடிநீர் கட்டண தொகை 2013ம் ஆண்டு கோவை மாநகராட்சியின் குடிநீர் விதிகளின் படியே வசூலிக்கப்படுகிறது.
எனவே கட்டண நிர்ணயத்திலோ, வசூலிக்கப்படும் கட்டண தொகையிலோ சூயஸ் நிறுவனத்திற்கு எந்த உரிமையும் இல்லை. குடிநீர் கட்டணத் திருத்தங்கள் செய்யப்படுமாயின் அது கோவை மாநகராட்சி மாமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே நடைமுறைப்படுத்தப்படும்.” இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.






