கோவை: கோவை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஓணம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஹெலிகாப்டரில் மாவேலி அரசன் வந்து இறங்கியதை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் இம்மாத இறுதியில் கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
அந்த வகையில், கோவை-கேரள எல்லையில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஓணம் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் வினோத் மற்றும் செயலர் நீலராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் மாவேலி வேடமிட்ட மாணவர் ஹெலிகாப்டரில் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ஹெலிகாப்டர் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்கியதும், அங்கு திரண்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து மாவேலி அரசனுக்கு கேரள பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்காரி மேளத்தின் தாள இசையுடன் மாவேலி அரசனின் வருகை நடைபெற்றது. மாணவிகள் அத்தப்பூக்கோலம் அமைத்து, கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து மோகினியாட்டம், கதகளி, திருவாதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கேரள பைபாஸ் சாலையில் இருந்து கல்லூரி வரை செண்டை மேளம் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க மாவேலி அரசனுக்கு மன்னர் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ-மாணவிகள் மேளதாளங்களுக்கு ஏற்ப ஆடிப்பாடி ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாக, கேரள பாரம்பரிய உடையணிந்த மாணவிகள் கல்லூரி மைதானத்தில் சுமார் 30 நிமிடங்கள் இடைவிடாமல் கைகொட்டிக் களியாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் உற்சாகமான நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஹெலிகாப்டரில் மாவேலி அரசன் வருகை, செண்டை மேளம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கைகொட்டிக் களியாட்டம் என தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியின் ஓணம் விழா மாணவர்களின் உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.





