கோவை: கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட 14 நிலைய அலுவலர்களுக்கு 58 மீட்டர் உயரம் வரை செல்லும் ஸ்கை லிப்ட் வாகனத்தை இயக்குவது மற்றும் உயர்மட்ட மீட்புப் பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது
தீயணைப்புத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலைய அலுவலர்களுக்கு, உயரமான கட்டிடங்களில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் ஸ்கை லிப்ட் வாகனத்தின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 121 நிலைய அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக களப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் 5 நிலைய அலுவலர்கள் தொடர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சியில் நிர்வாக நடைமுறைகள், தீயணைப்பு நிலைய நிர்வாகம், அவசரகால செயல்திட்டங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், ஆவணங்கள் பராமரிப்பு, வாகன பராமரிப்பு, நிலைய ஆய்வுகள் மற்றும் பாம்பு உள்ளிட்ட விலங்குகளை மீட்பது தொடர்பான பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பயிற்சி பெற்று வரும் 14 நிலைய அலுவலர்களுக்கு கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் ஸ்கை லிப்ட் வாகனம் குறித்த சிறப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
Also Read: கோவையில் தமிழ்நாடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 49-வது ஆண்டு மாநாடு
ஸ்கை லிப்ட் வாகனத்தின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள், பராமரிப்பு மற்றும் உயரமான கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் பயிற்சி வழங்கினர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், கோவையில் உள்ள ஸ்கை லிப்ட் வாகனம் சுமார் 58 மீட்டர் உயரம் வரை சென்று, உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் திறன் கொண்டது.
இந்த வாகனம் கோவையில் இருப்பதால், இங்கு பயிற்சி பெறும் நிலைய அலுவலர்களுக்கு நேரடி செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், பிற மாவட்டங்களில் பயிற்சி பெற்று வரும் நிலைய அலுவலர்களுக்கும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஸ்கை லிப்ட் வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடி விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சியில் 2 பெண் நிலைய அலுவலர்களும் எந்தவித அச்சமுமின்றி ஸ்கை லிப்டில் உயரத்திற்குச் சென்று மீட்புப் பயிற்சியை மேற்கொண்டனர்.





