கோவை: தமிழ்நாடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 49-வது ஆண்டு மாநாடு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டின் தொடக்க விழாவில், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் டி. மருது பாண்டியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சி. பழனிவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் ஜமீர் பாஷா மற்றும் தமிழ்நாடு கிளை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் ஜெயலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டை மருத்துவர்கள் சரதா, நிர்மலா, ராஜ்குமார் மற்றும் வினோதினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இதில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கே.எம்.சி.எச். உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற மாநாட்டில், அறுவை சிகிச்சை துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள், நவீன சிகிச்சை முறைகள், மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் எதிர்கால மருத்துவத் துறையின் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்களின் அறிவு மற்றும் திறன்களை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டின் நோக்கம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், எதிர்கால தலைமுறை மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்கள் குறித்து பயிற்சி அளிப்பதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.
குறிப்பாக ரோபோடிக் அறுவை சிகிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI), தொலைதூர ரோபோடிக் அறுவை சிகிச்சை, மேம்பட்ட லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் குறித்து மாநாட்டில் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.





