கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் 2026–27-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
கோவை அரசு கலைக்கல்லூரியில் ஷிப்ட்-1 மற்றும் ஷிப்ட்-2 என மொத்தம் 21 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் எம்.சி.ஏ. படிப்பை தவிர்த்து 20 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு கல்லூரி மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
முதலாம் ஆண்டு முதுநிலை படிப்புகளில் மொத்தம் 557 இடங்கள் உள்ள நிலையில், இதற்காக 5,046 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன் அல்லது மகள், என்.சி.சி. உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (திங்கள்) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை, விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள சமூக இடஒதுக்கீட்டு விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.
விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தரவரிசை நிர்ணயத்திற்காக தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களுடன் இன்று காலை 9 மணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கோவை அரசு கலைக்கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.





