கோவை : கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற Indian Para Cricket League கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் 15 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
Rotaract Club of Coimbatore Gaalaxy மற்றும் யாழ் ஹோம்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்று வருகிறது. IPL போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடனும், விளையாட்டு உணர்வுடனும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை பாராட்டிப் பேசினார்.
அப்போது அவர், “இதை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி என்று மட்டும் பார்க்க முடியாது. அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்து, மூன்று நாட்கள் போட்டியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது” என்றார்.
மேலும், IPL போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடன் இந்தப் போட்டி நடைபெற்று வருவதாகவும், தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
“கடவுளின் குழந்தைகள் என்று இவர்களை அழைப்பது மட்டும் போதாது. அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில், இவர்களுக்காக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் பாராட்டுக்குரியது” என அவர் கூறினார்.
மேலும், விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு தவெக அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்கள் மேலும் பல உயரங்களை அடைய தேவையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தினார்.
இந்த சிறப்பான போட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி கேலக்சி அமைப்பினருக்கும், போட்டியில் பங்கேற்ற 15 மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கனிமொழி சந்தோஷ் கூறினார்.





