கோவை: “டாஸ்மாக் பிரச்சனை என்பது 200 படிகள் கொண்டது. அதில் 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளை ஏறி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் அருகே தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஊழியர்கள் விவகாரம் குறித்து பேசினார். முன் அறிவிப்பின்றி கடைகளை அடைத்த ஊழியர்கள் தற்போது மீண்டும் கடைகளை திறக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் பழிவாங்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
“தப்பு யார் செய்தாலும் தப்பு தான். அரசு தப்பு செய்தாலும், அமைச்சர் தப்பு செய்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
தற்போது டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே காரணம் என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். கடந்த காலங்களில் ஊழியர்களின் பிரச்சனைகளில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விவகாரம் இவ்வளவு தூரம் வந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
மேலும், டாஸ்மாக் விவகாரம் மட்டும் தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்றும், இதுபோன்ற பிரச்சனைகள் பல்வேறு துறைகளிலும் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.





