கோவை: கோவையில் மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதைப்பொருள் விற்க முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனைக்கு திட்டமிட்டிருந்ததும் போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு மெத்தபெட்டமின் என்ற உயர் ரக போதைப்பொருளை சிலர் கடத்தி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று போலீசார் கோவையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
Also Read: கோவையில் முதன்முறையாக பாஜா ஆஃப் ரோடு பந்தயம் – வீடியோ காட்சிகள்
அப்போது, ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த 4 பேர் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருளை கடத்தி கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் ஒருவர் கோவை சாயிபாபா காலனியை சேர்ந்தவர் என்பதும், மற்ற 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் பெங்களூரில் இருந்து மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருளை கடத்தி வந்து கோவை மற்றும் கேரளாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் 5 பேரிடம் இருந்து 70 கிராம் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் மற்றும் ஒரு கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்தனர். அவர்கள் பெங்களூரில் எங்கிருந்து போதைப்பொருளை கடத்தி வந்தனர், பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: கோவையில் ஜூலை 22ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
சமீப காலமாக கோவையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் மிக அதிகமாக இருப்பதாகவும், இதனை தடுக்க போலீசார் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.





