கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில், கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் தன்னை தாக்கியதாக சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்த 21 வயதான பாலாஜி, திருப்பூரில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
காவல்துறையினரின் வேண்டுகோளின்படி, கஞ்சா பயன்படுத்துவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை ரகசியமாக வழங்கி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிலர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும், இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் பாலாஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சல்மான்கான், அவரது தாய், இணையதுல்லா, நிஷா, அயூப், சாகிர் உள்ளிட்ட 6 பேர் தன்னை செருப்பு மற்றும் கட்டையால் தாக்கியதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Also Read: கோவை மாணவர்களை குறிவைத்த போதை கும்பல் சிக்கியது!
ஆனால், தனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் போலீசார் செயல்பட்டதாக குற்றம்சாட்டி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு கஞ்சாவுடன் பிடிபட்ட ஒருவர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், காவல்துறைக்கு உதவி செய்த தனக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தனது புகார் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவரின் வீடியோ காட்சிகள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பாலாஜியின் புகாரின் அடிப்படையில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இணையதுல்லா என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். மற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கோவையில் முதன்முறையாக பாஜா ஆஃப் ரோடு பந்தயம் – வீடியோ காட்சிகள்





