கோவை: கோவையில் தென்னிந்திய அளவில் முதன்முறையாக நடைபெற்ற பாஜா இந்தியா ஆஃப்-ரோடு வாகனப் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக நடைபெற்று வரும் பாஜா ஆஃப்-ரோடு வாகனப் போட்டிகள், இந்தியாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன.
அந்த வகையில், தென்னிந்தியாவில் முதன்முறையாக பாஜா இந்தியா ஆஃப்-ரோடு வாகனப் போட்டி, கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியின் ஆஃப்-ரோடு மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்களே வடிவமைத்து உருவாக்கிய ஆஃப்-ரோடு வாகனங்களுடன் போட்டியில் பங்கேற்று, தங்களது வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தினர்.
Also Read: கோவையில் ஜூலை 22ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
வாகன வடிவமைப்பு, பாதுகாப்பு, செயல்திறன், உற்பத்தித் திறன், செலவுக் கணக்கிடல், வணிக விளக்கக்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிலையான மதிப்பீடுகளுடன், கடினமான தடங்களில் வாகனங்களின் வேகம், கட்டுப்பாடு மற்றும் நீடித்த செயல்திறனையும் சோதிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டி மூலம் மாணவர்கள் தொழில்துறைக்குத் தேவையான வடிவமைப்பு, உற்பத்தி, குழுப்பணி மற்றும் புதுமை சார்ந்த திறன்களை நடைமுறையில் வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
VIDEO
மேலும், கோவையில் இந்தப் போட்டி முதன்முறையாக நடத்தப்படுவது, நகரின் பொறியியல் கல்வி மற்றும் வாகனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக அமையும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.





