கோவை: கோவை சாய்பாபா கோயில் அருகே சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கி பயணிகள் அதிர்ச்சி; பெரும் விபத்து தவிர்ப்பு.
கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாய்பாபா கோயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த பின்னர், தோண்டப்பட்ட பள்ளம் முறையான தரத்துடன் மூடப்படாமல், அரைகுறையாக மண் கொட்டி மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இறங்கியது. மண் உள்வாங்கியதால் பேருந்தின் சக்கரம் ஆழமாக சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது.
பேருந்து திடீரென ஒருபுறமாக சாய்ந்து நின்றதால், அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்து கவிழாமல் தடுக்கப்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பேருந்து சாலையில் சிக்கியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது.
அதிகாரிகளின் அலட்சியத்திற்கு கண்டனம்
சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகையில், மாநகராட்சி மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகளை உடனடியாக முறையாக சீரமைப்பதில்லை என குற்றம்சாட்டினர்.
லேசான மழை பெய்தாலோ அல்லது அதிக வாகனங்கள் சென்றாலோ, அரைகுறையாக மூடப்பட்ட பகுதிகளில் மண் உள்வாங்கி பெரிய பள்ளங்கள் உருவாகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக, சாய்பாபா கோயில் போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில், பல மாதங்களாக தோண்டப்பட்ட பகுதி முறையாக சீரமைக்கப்படாமல் மண்ணை மட்டும் கொட்டி மூடப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறினர்.
பெரிய விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
மேலும், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சேதமடைந்த சாலைகளை முறையாக ஆய்வு செய்து முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் முடிந்தவுடன் சாலைகளை தரமான முறையில் சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





