கோவை : கோவை சிங்காநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, சித்தூர் பால்வாடி வீதியைச் சேர்ந்தவர் வினிதா (19). இவருக்கும் ராமு என்பவருக்கும் கடந்த 26.07.2024 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் கோவை சிங்காநல்லூர், வெள்ளலூர் ரோடு பகுதியில் வசித்து வந்தனர்.
வினிதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப். 3-ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினிதா தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ராமு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் வினிதாவை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வினிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வினிதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால், சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.





