Coimbatore Weather: கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பதிவான நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மழை பதிவானது.
இதனிடையே மாவட்டத்தில் இன்று, கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், தடாகம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த சூழலில், அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில், சில நாட்களில் லேசான மழைக்கும், தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை இல்லாத வானிலைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: கோவையில் அதிர்ச்சி… பேருந்தில் வந்தவரின் ரூ.1 கோடி பணம் பறிப்பு!
7 நாட்களுக்கான முன்னறிவிப்பின்படி, செப்டம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை கோவையில் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் மழைக்கான வாய்ப்பு குறைந்து, பெரும்பாலும் பகுதியளவு மேகமூட்டமான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகலாம்.
அதன்பிறகு செப்டம்பர் 8-ம் தேதி மீண்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 9, 10 மற்றும் 11-ம் தேதிகளில் கோவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், “மழைக்கு இரண்டு நாள் Leave… அதுக்கப்புறம் மீண்டும் Entry!” என்ற நிலை கோவையில் உருவாகும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 9 முதல் 11-ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வானிலை நிலவரத்தை கவனித்து பயணங்களை திட்டமிடுவது நல்லது.





